“நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதியை பறிப்பேன்” என சீமான் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தநாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இங்குள்ள மேய்ச்சல் நிலப்பகுதியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு இடம் உள்ளதாகவும், நான் சென்றால் பிரச்சினையாகிவிடும் என்று எனக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு நேற்று முன்தினம் இரவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை அவர் நேற்று நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவரால் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பணகுடி பகுதி மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு அங்கே நிலம் இருக்கிறது. அரசின் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நான் பணகுடி சென்றால் பிரச்சினையாகிவிடும் என்பதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கால்நடைகளின் வாழ்விடத்தில் அவற்றுக்கு அனுமதி வழங்காமல் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக தேவைகளுக்கு மட்டும் மணல், கற்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தினால் 300 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்த முடியும்.
திமுக-வுக்கு மாற்று அதிமுக அல்ல. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே எந்தக் கொள்கை மாற்றமும் இல்லை. ஆட்சியை மாற்றுவதால் பலன் இல்லை. ஆட்சி முறையையே மாற்ற வேண்டும். தமிழ் வாழ வேண்டும் என்பதே என் கோரிக்கை.
தேவைப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்கலாம், ஆனால் தாய்மொழிக்கே முதன்மை கொடுக்க வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் கல்வித் தகுதி பறிக்கப்படும், மக்களின் பிரச்சினைகள் கேட்கப்படாது, தீர்க்கப்படும்.
பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என பாட்டுப் பாடும் தம்பி விஜய்கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் எனச் சொல்லவில்லை. பிஹாரில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாஜக வெற்றியைப் பெற்றுவிட்டது. அதுபோல் தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கலாம். ஏன் ரூ.5 ஆயிரம்கூட கொடுக்கலாம். வாக்கிற்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்தில் தேவை. இவ்வாறு தெரிவித்தார்.