தமிழகம்

“தமிழக, திருச்சி பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன்” - கிறிஸ்டோபர் திலக் உறுதி

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: “தமிழக, திருச்சி பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன்” என காங்கிரஸ் சார்பில் ராஜ்ய சபா எம்.பி. ஆகவுள்ள கிறிஸ்டோபர் திலக் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 9 வெளியாக உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், திருச்சி இளைஞர் காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக உள்ளார்.

          

இந்நிலையில், கிறிஸ்டோபர் திலக் இன்று திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கிறிஸ்டோபர் திலக் கூறியது: “ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, அடிமட்டத் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, என்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா, ராகுல், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

திருச்சி மாநகரில் இளைஞர் காங்கிரஸில் எனது பணியை தொடங்கி இன்று தேசிய அளவில் பல மாநிலங்களில் பணியாற்றி உள்ளேன். ராஜ்ய சபாவில் தமிழக பிரச்சினைகளை எடுத்து வைத்து, மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன். திருச்சி மாவட்ட மக்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன்.

ஏற்கெனவே இங்கு உள்ள எம்.பிக்களுடன் இணைந்து பணியாற்றி, திருச்சி மாநகரின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு பாடுபட்டு, திருச்சி மாநகரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன்.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், அவருக்கு ஒரு வேட்டி சட்டையை கொடுத்து, கும்பகோணம் டிகிரி காபி ஆத்துவது போல ஒரு சீன் கொடுத்துவிடுவார்கள். அவருக்கு எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசிவிட்டு செல்வார். ஒவ்வொரு முறை அவர் வரும்போது தமிழகத்தில் அரசியல் ரீதியாக அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்க வேண்டும்” என்றார் கிறிஸ்டோபர் திலக்.

SCROLL FOR NEXT