தமிழகம்

“அரசியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - அண்ணாமலை உறுதி

கி.மகாராஜன்

மதுரை: தொகுதி பொறுப்பாளர் பணியிலிருந்து விலகினாலும், அரசியலிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என மதுரையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: “நடிகர் விஜய்யையும், தவெகவையும் இன்னும் அடிக்க ஆரம்பிக்கவே இல்லை. இனிதான் அடிப்பேன். விஜய் அரசியலுக்கு வந்த போது வரவேற்றேன். அவர், அவர் பாதையில் போகட்டும். விஜய் எங்களுடன் கூட்டணி சேரவில்லை என்பதற்காக அவரை தாக்கி பேசமாட்டேன். அதே நேரத்தில் டப்பா இன்ஜின் எனக் கூறினால் தக்க பதிலடி கொடுப்பேன். அதற்கு விஜய்க்கு அல்லு சில்லறைகளை வைத்து பதிலளித்தால் அதே பாணியில் தரம் தாழ்ந்தும் பதிலடி கொடுப்பேன். நாகரீகமாக பேசினால் என் பதிலும் நாகரீகமாக இருக்கும். ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் அவர்கள் நினைப்பது பிரதிபலிக்கும்.

          

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு பதிலளித்தால் எல்லையில்லாமல் போகும். இதை எச்சரிக்கையாக கூட அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். விஜய் கைதட்டு பெற தவெக கூட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவரின் பேச்சு வாக்காளர்களை சிந்திக்க வைக்கும் பேச்சாக தெரியவில்லை. இதனால் அவரது பேச்சை கடந்து போய்விட வேண்டும்.

கரூரில் சட்டவிரோத குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை திமுக எம்எல்ஏ தாக்கியது கண்டிக்கதக்கது. இதில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஊடகத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பார்க்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துவதே திமுகவினராக தான் உள்ளனர். சட்டம் ஒழுங்கு அதளபாதளத்திற்கு சென்றுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார். மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியதை தமிழக அரசு மன்னிப்பு கோரியதாகவே பார்க்க வேண்டும். ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் பலியாடாக ஆக்கப்பட்டுள்ளனர். ஆட்சியருக்கு 144 தடையாணை பிறப்பிக்க சொன்னது யார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 144 பிறப்பித்தது மோசடி என மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. தமிழக அரசு நீதிமன்றத்தில் வெட்கி தலை குணிந்துள்ளது. கலவரம் நடத்த முயன்றது யார்? அந்த பழியை பாஜகவினர் மீது போடுகின்றனர்.

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதில் இருந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தை வாக்கு அரசியல், சிறுபான்மையினர் அரசியலுக்காக தமிழக அரசே உருவாக்கியுள்ளது தெரிகிறது. தமிழகம் காங்கிரஸ் மாநிலமாக பல ஆண்டுகளாக இருந்துள்ளது. தமிழகத்தில் அடையாள தலைவர்கள் இருந்தனர். இன்றைய காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தியை பிரதிபலிக்கும் கட்சியாகவே உள்ளது. திமுகவுக்கு எதிராக பேசிய தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத தலைவராக தமிழக காங்கிர்ஸ் தலைவர் உள்ளார். எதற்கு டெல்லியை எதிர்பார்த்து இருக்கும் நிலையால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்தது.

தமிழகத்தில் இருந்த அதிகாரத்தை டெல்லியில் கொடுத்துவிட்டனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸுக்கு சீட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் பேசுபொருளாக இருந்து வருகிறது. காரணம் தேவையில்லாமல் பிரதமர் மோடியை பேசுவதால் காங்கிரஸ் பேசப்படுகிறது.

ஓபிஎஸ் உட்பட யாரும் தனித்து விடப்படவில்லை. காலம் இருக்கிறது. அனைவரும் ஒரே அணிக்கு வருவார்கள். திமுக ஆட்சி தூக்கி எறியப்படும். சேகர்பாபு போல் அண்டி பிழைக்கும் ஆண்டி நானில்லை. முதல்வர் வாகனத்தில் பல்லி போல் ஓட்டிப்போவார். சென்னையின் ரவுடியாக இருந்தார். இப்போது அறநிலையத்துறை அமைச்சராகவும் ரவுடி போல் தான் இருக்கிறார். அவருக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என கனிமொழி பேசினார். அவர் என்ன மனநிலையில் அப்படி பேசினார் என்பது தெரியவில்லை. அவர் நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது.

இந்தியாவின் கடைசி நகரங்களின் பட்டியலில் மதுரை உள்ளது. ஆனால் மதுரை தமிழ்சங்கம் பார்த்த நகரம். மதுரை அளவுக்கு பழமையான வாரணாசி எங்கிருக்கிறது. மதுரை எப்படியிருக்கிறது, குப்பை நகரமாக உள்ளது.

சு.வெங்கடேசன் திமுக பற்றி மட்டும் பேசமாட்டார் மற்றதை எல்லாம் பேசுவார், நாடாளுமன்றத்தில் மோடியை பற்றி குற்றம் சொல்லி பல பொய்களை சொல்லி மாட்டுவார். நாடாளுமன்றத்தில் குப்பை பிரச்சினையை பேசியிருக்கிறாரா? மேயருடன் பேசியுள்ளாரா? அவர் பேசுவதெல்லாம் சீனா, அண்டார்டிகா போன்ற நாடுகள் பற்றி தான். மதுரையில் மேயர் இல்லாமல் இரு அமைச்சர்களும் தனிக்காட்டு ராஜாவாக உள்ளனர். இரு அமைச்சர்கள் இருந்தும் இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை மாநகரம் குப்பை மாநகரமாக மாற்றி வைத்துள்ளனர்.

தேர்தல் பொறுப்பாளர் பணி என்பது கட்சியின் அமைப்பு பணி. அதற்கு நல்ல திறமையான தலைவர்கள் உள்ளனர். இந்த வேலை ஆத்மார்த்தமான வேலை. தொகுதியில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு நேரம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன். இதனால் அதிலிருந்து விலகியுள்ளேன். மற்றபடி அரசியலில் இருந்து பின்வாங்க போவதில்லை. யாரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பது கட்சிக்கு தெரியும். 2026 தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுகவை இறக்க வேண்டும் என்பதில் என்டிஏ தெளிவாக உள்ளது. என்னை எங்கு போட்டியிடச் சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்.  

நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் நடித்தவர். முதல்வருக்கு ஜால்ரா அடித்தார். நாடக நடிகர் அரசியல் கருத்து கூறுவது வேடிக்கையாக உள்ளது. காமெடிக்கு ஒருவர் வேண்டும் என்பதால் காமெடி நாடக நடிகர் டிக்கெட்டுக்காக பேசுகிறார். ஒரு எம்எல்ஏ பதவிக்காக பிச்சை எடுக்கும் நிலையில் எஸ்வி சேகர் உள்ளார். நாடக கூடாரம் போல் கட்சி கட்சியாக மாறுபவர்களுக்கு எப்படி பதிலளிக்க முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அழகர்கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களில் அண்ணாமலை தரிசனம் செய்தார். மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மாரிச்சக்கரவர்த்தி, பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT