

செங்கோட்டையன்
சென்னை: “கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. விஜய் நேரில் ஆஜராகி இருமுறை விளக்கம் அளித்து இருக்கிறார். இபிஎஸ் என்ன சிபிஐ உயர் அதிகாரியா?” என தவெக நிர்வாகி செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் இபிஎஸ் மட்டும் குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் அந்தக் கட்சியே காணாமல் போயிருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், “எடப்பாடி பழனிசாமி என்ன சிபிஐ அதிகாரியா? கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. விஜய் நேரில் ஆஜராகி இருமுறை விளக்கம் அளித்து இருக்கிறார். இவர் சொல்வதனால் விசாரணை நின்றுவிடுமா?
கொடிப் பறக்குது. பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். பெரிய கட்சி கூட்டணிக்கு வருகிறது என்றெல்லாம் யார் பேசினார்கள்? கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் இப்போ இப்படி பேசுகிறார்கள்.
தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். உங்கள் வீட்டு பெண்கள் என்ன சொல்லுகிறார்கள்? தவெகவுக்கு ஓட்டு போடும் என சொல்கிறார்களா, இல்லையா?
நாங்கள் பட்ஜெட் குறித்து இப்போது ஏதுவும் சொல்ல முடியாது. நாங்கள் வளர்ந்து வருகின்ற ஒரு கட்சி. ஆட்சிக்கு வந்த பிறகு பட்ஜெட் குறித்து சொல்வோம்” என்று அவர் கூறினார்.