தொலைநோக்குத் திட்டத்துடன் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் தனது பெயரில் ‘ஜேசிஎம்’ என்ற சேவை அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு நல உதவிகளைச் செய்துவந்தார்.
தேர்தல் நெருங்கியதால் அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற முடிவெடுத்தார். ஆனால், தனி நபர் பெயரில் இருக்கும் அமைப்பை அரசியல் கட்சியாக்க விதிகளில் இடமில்லை என்பதால் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை அண்மையில் தொடங்கினார். இவருக்கு பாஜக எம்எல்ஏ-க்களில் சிலர் மறைமுகமாகவும், இதுவரை பாஜக-வுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சைகள் வெளிப்படையாகவும் இப்போது ‘நேசக் கரம்’ நீட்டி இருக்கிறார்கள்.
சினிமாக்களில் வரும் அரசியல்வாதிகள் கணக்காய் காஸ்ட்லி காரில் முன்னும் பின்னும் எஸ்கார்ட் வாகனங்கள் புடைசூழ ஜோஸ் சார்லஸ் வலம் வருகிறார். முதலமைச்சராகவே இருந்தாலும், “இதுக்கு பதில் சொல்லிட்டுப் போங்க சார்” என்று உரிமையோடு கேட்டுப் பழகிவிட்ட புதுச்சேரி மக்கள், ஜோஸ் சார்லஸின் ‘ஜிகினா அரசியலை’ சற்று தள்ளி நின்று தான் வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்த நிலையில், ஆரம்பத்தில் விஜய் கட்சியுடன் கூட்டு வைக்க சார்லஸ் தரப்பு முயற்சி எடுத்தது. ஆனால், பனையூர் பக்கம் இருந்து பதிலே வரவில்லை. இதனிடையே, புதிதாக படை திரட்டும் சார்லஸை கொஞ்சம் அடக்கி வைக்க அமித் ஷாவே அவரை டெல்லிக்கு அழைத்துப் பேசியதாக ஒரு தகவல் பரவியது. போதாதுக்கு, காங்கிரஸும் அவரை கரித்துக் கொட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் சார்லஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தேர்தலோடு நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள் என்கிறதே காங்கிரஸ்..?
காங்கிரஸ் பயப்படுறாங்க. முதலில் என்னை சாதாரணமா நினைச்சாங்க. அவங்க ஓட்டு பிரியும் எனத் தெரிந்ததும் இப்போது பயத்தை வெளிப்படுத்துறாங்க.
உங்களுக்கு பாஜக நெருக்கடி ஏதும் தருகிறதா?
எந்த நெருக்கடியும் இல்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம். மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம்.
மத்திய அரசு நெருக்கடி தருகிறதா?
மத்திய அரசு நெருக்கடி தரவில்லை. அவர்கள் சில கருத்துகளை சொல்றாங்க. நாங்கள் எங்கள் தரப்பை சொல்லி இருக்கிறோம்.
அமித் ஷாவை நேரில் சந்தித்தீர்களா?
நேரில் சந்திக்கவில்லை; அழைத்தால் சந்திப்பேன்.
யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள்… பாஜக-வா, தவெக-வா?
எல்லா பக்கமும் இருந்து ‘ஆஃபர்’ வருது. எல்லோருடனும் பேசிட்டு இருக்கோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. ஒரு நாள் கூத்துக்காக கட்சி நடத்த முடியாது. எல்லோரையும் அனுசரித்தே கட்சி நடத்த முடியும்.
முதலில், 30 தொகுதிகளிலும் போட்டி என்றீர்கள். அதே நிலை தொடர்கிறதா... நீங்கள் எங்கு போட்டியிடப் போகிறீர்கள்?
கூட்டணியை பொறுத்துதான் எத்தனை தொகுதியில் போட்டி என்பதை முடிவு செய்வோம். அனைத்து கேள்விகளுக்கும் சீக்கிரமே விடை தெரிந்து விடும்.