முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர்: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய், தவெக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஐ.ஜி, எஸ்.பி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகக்கூறி அன்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு அவர் 15 நாள் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனம், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியதாகவும், அதனை செந்தில் பாலாஜியோ, அவரது பிரதிநிதிகளோ அவரது வீட்டிலோ, அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேலும் அவரது இ-மெயிலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் எவ்வித பதிலும் (ரெஸ்பான்ஸ்) அளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழிடம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கரூர் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள எனது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் வந்து என் தந்தை வேலுசாமியிடம் நான் எங்கே என கேட்டுள்ளனர். அவர் நான் சென்னை சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் என்னை தொடர்பு கொண்டப்போது அவர்கள் கடிதம் எதுவும் அளித்தால் பெற்றுக்கொள்ளுமாறு தந்தையிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் சம்மன் எதுவும் அளிக்கவில்லை. எனது அலுவலகத்திற்கோ, இ-மெயிலுக்கோ சிபிஐ சம்மன் எதுவும் அனுப்பவில்லை’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இ-மெயிலுக்கு இன்று (மார்ச் 10ம் தேதி) காலை சிபிஐ சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து முன்னுக்கு பின் முரணாக சில ஊடங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17ம் தேதி அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.