சென்னை: தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக, விரும்பிப் படிக்கிறான். அதேநேரம், வேறொரு மொழியை என் மீது திணித்தால் அதை ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
சீர்மிகுசட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம், ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் 3-வது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியது:
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் முதல் இடத்தில் இருப்பது மொழி. உலகில் 6,000 மொழிகள் பேசப்பட்டாலும் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளே 2,000 ஆண்டுகளைக் கடந்தவை. அதிலும், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் 3,500 ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் ஒரே மொழி தமிழ் என்பது கீழடி அகழாய்வில் நிரூபணம் ஆகிஉள்ளது.
எந்த அரசனையோ, இறைவனையோ, மதத்தையோ உயர்த் திப் பிடிக்காத திருக்குறளில், ஒவ்வொரு அறக்கூற்றையும் நுட்பமாக சொல்ல முடிந்தது என்றால் 2,000 ஆண்டு முந்தைய தமிழனின் வளர்ச்சியை எண்ணிப்பார்க்க வேண்டும்.
சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தை மகனுடன் சென்று பார்த்தேன். ‘தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தது தெரியுமா’ என்று கேட்டதற்கு, அவன் தெரியாது என்றான். அதை சொல்லித்தராமல் கடமையில் இருந்து தவறியதற்கு வேதனை அடைந்தேன், மொழிப் போராட்டம் பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
பாடத்திட்டத்தில் வேறு மொழிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியதால், மாணவர்களிடம் தமிழ் மீதான தாக்கம் குறைகிறது. தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக, விரும்பிப் படிக்கிறான். என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் ஒருபோதும் அதை ஏற்கமாட்டேன். மொழிக்கு இழுக்கு வரும்போது, உங்கள் குரல் உயர வேண்டும். தமிழ் மொழியைப் பேசுவதும், பாதுகாப்பதும், அதன் அருமையை தூக்கிப் பிடிப்பதும் நம் கடமை. இவ்வாறு பேசினார்.
விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசன், ராகேஷ் சட்ட அறக்கட்டளைத் தலைவர் என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.பாலாஜி, பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.