சென்னை: “வீரமணி விவகாரத்தில் ஜான்பாண்டியனுக்கு சாந்தியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்” என தமிழக காங்கிரஸ் எஸ்சி அணி மாநில தலைவர் ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறுமி பாதிக்கப்பட்ட விவரம் தெரிந்தவுடன் நான் காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்தேன். ஆனால் அந்த அதிகாரி, ‘இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம், இதை வெளியே கொண்டு வந்தால் ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாது.
அதனால் வெளியில் பேச வேண்டாம்’ என்று கூறியதால், காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தேன். 2024 நவம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து ஆதாரங்களையும் வாட்ஸ்அப் உரையாடல்களையும் வழங்கினேன். இது ஒரு மொட்டைப் பெட்டிஷன் அல்ல. இந்திய அளவிலான ஒரு கட்சியின் லெட்டர் பேடில் முறைப்படி அளிக்கப்பட்ட புகார்.
ஆனால், ‘பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று கூறி அவர்கள் தேடிக்கொண்டே இருந்தார்கள். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 2025-இல் புகார் வந்த மறுநாளே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார். 2024-லேயே கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனரிடம் நான் அளித்த ஆதாரங்கள் மற்றும் புகார்கள் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. அனாமதேயமாக பென்டிரைவ் வந்ததாகக் கூறுவது ஏனென்று தெரியவில்லை.
ஜான் பாண்டியனுக்கு, சாந்தியை அறிமுகப்படுத்தியது நான் தான். ஆனால், பணம் வாங்குவதற்காக நான் அவரைச் சந்திக்க வைக்கவில்லை. சாந்திக்கும், ஜான் பாண்டியனுக்கும் இடையே நடந்த உரையாடல்களை நேரில் பார்த்தபோதுதான் இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் எனக்குத் தெரியவந்தன.
அதன்பிறகுதான் இதிலிருந்து விலகினேன். இந்த வழக்கில் ஜான் பாண்டியன் தவறு செய்திருந்தாலும் அல்லது ரஞ்சன் குமாராகிய நான் தவறு செய்திருந்தாலும், நீதிமன்றம் யாராக இருந்தாலும் தண்டிக்கும். விரைவில் உண்மை வெளிவரும். காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.