தமிழகம்

நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை: தவாக தலைவர் வேல்முருகன் உருக்கம்

செய்திப்பிரிவு

“வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பயணித்து வந்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகளை வழங்கவும், 10 பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றவும் அக்கட்சி திமுக-விடம் வலியுறுத்தியது. ஆனால், திமுக தரப்பில் ஒரு இடம் மட்டும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

          

மேலும், கோரிக்கைகள் தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்தார். எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சிறிய கட்சிகள், அமைப்பு களுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என்று தி.வேல்முருகன் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியா பதிவில், “நான் பண்ருட்டி தொகுதியில் நிற்கப் போவதில்லை என்று நிர்வாகிகளை அழைத்து தெரிவித்தேன். பண்ருட்டி மட்டுமல்லாமல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்தமுறை நான் போட்டியிடப் போவதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.

ஒருவேளை மீண்டும் நமக்கு பண்ருட்டி தொகுதியில் இடம் கொடுத்தால்கூட கட்சியின் முன்னணி தலைவர்களைத் தான் நிறுத்துவேன். வேறு தொகுதியில் வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்களைத்தான் நிறுத்துவேன். நான் தமிழகம் முழுவதும் பயணித்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். இதற்காக, நீங்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT