சென்னை: ‘தமிழகம் முழுவதும் உள்ள 4,292 கோயில்களின் வரவு - செலவு கணக்குகளின் தணிக்கை விவரங்களை பொதுமக்கள் இணையத்தில் பார்வையிடலாம்’ என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் வரவு - செலவு கணக்கு விவரங்கள் தொடர்பான வருடாந்திர தணிக்கை விவரங்களை வெளிப்படையாக அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை ஏற்கெனவே விசாரி்த்த உயர் நீதிமன்றம், எத்தனை கோயில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன, எத்தனை தணிக்கை அறிக்கைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த வாரம் அறிக்கை அப்போது, அறநிலையத்துறை தரப்பில், ‘‘முதற்கட்டமாக இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 4,292 கோயில்களின் வரவு - செலவு கணக்குகளின் தணிக்கை விவரங்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உள்ள கோயில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட மாட்டாது. மற்ற கோயில்களின் கணக்கு விவரங்களின் அறிக்கைகளையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.