மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ ப.அப்துல்சமது
மதுரை: வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பகிரங்கமாக கண்டிக்காத விஜய் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என மனித நேய மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ ப.அப்துல்சமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி உள்பட பல்வேறு வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய கிறிஸ்தவர்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை தவெக தலைவர் விஜய் கண்டிக்கவில்லை. அவரது கட்சியை சேர்ந்த சிலர் பொதுவாக கண்டித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை விஜய் பகிரங்கமாக கண்டிக்கவில்லை.
விஜய்யின் கொள்கை எதிரிகள் ஆட்சியில் இருந்து கொண்டு தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, கல்வி, மாநில உரிமை, சமூகநீதி, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன் பல்வேறு பிரச்சினைகளையும் கொடுத்து வருகின்றனர். கொள்கை எதிரிகளுக்கு எதிராக தைரியமாக பேச துணிவில்லாதவராக விஜய் உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்து எல்லா மக்களையும் பாதுகாப்பார் என்பதை எப்படி நம்ப முடியும்.
விஜய்யை வைத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட முடியுமா என சங்பரிவார் அமைப்புகள் நினைக்கின்றன. இதற்கு விஜய்யும் துணை போகிறார். இதனால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளனர். இதில் ‘பாசிசமா, பாயாசமா’ என நக்கல் பேச்சு வேறு. ஒரு காலத்தில் ஜோசப் விஜய் என கிண்டல் செய்தவர்கள் தற்போது கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்யை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உயர் அதிகாரிகள் பலர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்கின்றனர். இப்படியான நடவடிக்கைகளை பார்க்கும் விஜய் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் இருந்து கொண்டு தமிழகத்தில் அவரை இயக்குவது தெளிவாக தெரிகிறது. இதை மக்களும் உணர்ந்துள்ளனர். இதனால் விஜய்க்கு எதிராக மக்கள் களத்தில் இறங்குவார்கள். நாமும் களத்தில் இறங்குவோம். விஜய் முகத்திரையை அகற்றுவோம்’ இவ்வாறு அவர் கூறினார்.