தமிழக வெற்றிக் கழகத்துக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரு துருவங்களாக இருந்த தமிழக அரசியலில், தற்போது விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணையத்திடம் 10 விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டு வழங்கியிருந்தனர். தற்போது அந்த நீண்ட காத்திருப்புக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் விடை கிடைத்துள்ளது. தவெக-வுக்கு ‘விசில்' சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்படுவதே வழக்கம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முறையாகக் கணக்குகளைத் தாக்கல் செய்ததாலும், கட்சியின் வலுவான முன்னெடுப்புகளாலும், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ‘விசில்' சின்னமே பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவெக-வின் முதல் அரசியல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
‘விசில்' என்பது சாமானிய மக்களிடமும், இளைஞர்களிடமும் மிக எளிதாகச் சென்றடையக்கூடிய ஒரு சின்னம். எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் இதைத் தீவிரமாகப் பயன்படுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே மாநிலம் முழுவதும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தவெகவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் தலைவர், முதல்வர் வேட்பாளர் விஜய்யின் வெற்றிச் சின்னமான விசில்.
தவெக தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் பணிகளில்தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்துக்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்’, என தெரிவித்துள்ளார்.
மநீம-வுக்கு ‘டார்ச் லைட்’ - கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மநீம பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. இடையில் சின்னம் தொடர்பாகச் சில இழுபறிகள் நீடித்த நிலையில், தற்போது மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னம் கிடைத்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘விசில் ஊதப்பட்டு விட்டது’ - தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே விஜய்யை சந்தித்துப் பேசியதோடு, தேர்தலுக்குப் பின் அமையும் ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும் என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பொடிவைத்து பதிவு போட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி புறப்பட ஆயத்தமாகி விட்டன,’ என குறிப்பிட்டுள்ளார். ‘கூட்டணி தொடர்பாக தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ள நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு கவனம் பெற்றுள்ளது.
விஜய் நன்றி: தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.