தனித்து விடப்பட்டதால் தவிப்பு: திருமாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தைலாபுரம்

தனித்து விடப்பட்டதால் தவிப்பு: திருமாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தைலாபுரம்
Updated on
1 min read

ஒரு காலத்தில் வடதமிழக அரசியலில், அண்ணனும் தம்பியுமாக வர்ணிக்கப்பட்டவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸும் விசிக தலைவர் திருமாவளவனும். ஆனால், தருமபுரி மற்றும் மரக்காணம் கலவரங்களுக்குப் பிறகு இருவரும் கீரியும் பாம்புமாக மாறி விட்டனர்.

“வட தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு பாமக-வும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் தான் காரணம்” என பகிரங்கமாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார். மேலும், “ஒரு போதும் மதவாத கட்சியான பாஜக-வுக்கும் சாதியவாத கட்சியான பாமக-வும் இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம்” என்றும் அறிவித்தார் திருமா.

இந்த நிலையில், பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் யுத்தத்தின் காரணமாக திருமா இருக்கும் திமுக கூட்டணிக்கு வரவேண்டிய சூழல் ராமதாஸுக்கு ஏற்பட்டிருக்கிறது. ராமதாஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினால் சிறுத்தைகள் கோபித்துக் கொள்வார்களோ என்று நினைத்து திமுக இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது. இந்த நிலையில், திருமாவுக்கு ராமதாஸ் தரப்பிலிருந்தே தூது அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கசிகிறது.

நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்தில் நடந்த பாமக-வின் நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில், “அன்புமணி இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக் கூடாது” என கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல்தலைவரான ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ உள்ளிட்டவர்கள் ராமதாஸிடம் வலியுறுத்தி இருக்கின்றனர். திமுக கூட்டணியில் இணைவதே ராஜதந்திரமாக இருக்கும் என்பதையும் அவர்கள் ராமதாஸுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருள், “அரசியலில் எதுவும் நடக்கும். ராமதாஸ் மீது எந்த வழக்கும் இல்லை. யாருடைய மிரட்டலுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் அவர் பயப்பட மாட்டார்” என்று தங்களுக்கு பாஜக- தரப்பிலிருந்து தரப்படும் அழுத்தத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

மேலும், “திருமாவளவனுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். 7 அம்பேத்கர் சிலைகளை ஓரே நாளில் திறந்தவர் ராமதாஸ். வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் இரு தண்டவாளங்களாக பார்ப்பவர் எங்கள் நிறுவனர். எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. எதிரியைத்தான் சமாதானப்படுத்த வேண்டும். அப்படியிருக்க திருமாவளவன் எங்களுக்கு எப்படி எதிரியாக முடியும்?” என்றும் அருள் பேட்டியளித்தார்.

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் இந்த விஷயத்தில் திமுக-வுக்கு சங்கடம் ஏற்படாத வகையில் திருமாவை சமாதானப்படுத்தும் முயற்சியை தைலாபுரம் தோட்டமே நேரடியாக மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தனித்து விடப்பட்டதால் தவிப்பு: திருமாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தைலாபுரம்
திருவனந்தபுரம் - தாம்பரம் ‘அம்ரித் பாரத்’ ரயில் சேவை: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in