“தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தோல்விக்கான காரணங்களை தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்திருக்கிறார். கூடவே, தொண்டர்கள் தங்களது கருத்துகளை தங்கள் குரலிலேயே பதிவு செய்ய ‘உடன் பிறப்பின் குரல்’ என்ற பிரத்யேக இணையதளத்தையும் தொடங்கி இருக்கிறார்.
தோல்விக்கான காரணத்தை தேடும் முன்பு, எங்கே சறுக்கி இருக்கிறோம் என்பதை திமுக தலைமையும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. மற்ற கட்சிகளில் இல்லாத கருத்துச் சுதந்திரம் திமுக-வில் உண்டு. யாராக இருந்தாலும் அவர்களையும் பேசவிட்டு மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிப்பார் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி.
கட்சியின் அடிமட்டத்தில் நடக்கும் சமாச்சாரங்கள் அப்படியே தனது கவனத்துக்கு வந்து சேர வேண்டும் என்பதற்காகவே, மாவட்டச் செயலாளர்களுக்கு போட்டியாக வளர்பவர்களையும் பொத்திப் பாதுகாத்தார் கருணாநிதி. அவர்களால் பல நேரங்களில் கட்சிக்குள் குத்துவெட்டுகள் நடந்தாலும் கட்சியை போட்டிபோட்டுக் கொண்டு வளர்த்தார்கள்.
ஒற்றை பீடியை உள்ளே இழுத்துக் கொண்டே, தேர்தல் கருத்துக் கணிப்பை சொல்லிவிடக் கூடிய சூரப்புலிகள் திமுக-வில் இருந்த காலமும் உண்டு. என்றைக்கு கமர்ஷியலான வியூக வகுப்புக் கம்பெனிகள் கட்சிக்குள் ஊடுருவி ‘கட்டளைகளை’ பிறப்பிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே கட்சியின் அந்த ஆரோக்கியம் கெட்டுவிட்டது. ‘அனைத்தையும் மேலே இருப்பவன் பார்த்துக்குவான்’ பாணியில் கட்சி நிர்வாகிகள் பலரும் சொகுசுக் காரில் பவனி வர ஆரம்பித்ததால் கம்பங்களில் கிழிந்து தொங்கும் கறுப்பு சிவப்புக் கொடியை மாற்றக்கூட ஆளில்லாமல் போனது.
கடைசி வரை, கலர் மங்கிப் போன சாதாரண கரைவேட்டி தான் கருணாநிதியின் அடையாளம். ஆனால், வியூகப் புலிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அவர்கள் சொன்ன இடத்தில் சைக்கிள் ஓட்டினீர்கள், வாக்கிங் போனீர்கள், டீ குடித்தீர்கள், செல்ஃபி எடுத்தீர்கள். இன்றைக்கு ரீல்ஸ் ஆட்சி நடத்துவதாக விஜய்யை விமர்சிக்கும் நீங்கள், இயல்புக்கு மாறாக இதையெல்லாம் செய்ததும் ஆட்சியை பிடிக்கத்தானே என்று திருப்பிக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
நீங்கள் இப்படி போட்டோ, வீடியோ ஷூட்டை விரும்புகிறீர்கள் என்றதும் மாவட்டச் செயலாளர்களும் தலைக்கு 300 ரூபாய் கொடுத்து ஆட்களை திரட்டி உங்களுக்கு போலியான பிம்பத்தை கட்டமைத்துக் காட்டினார்கள்.
அதனால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல் போனது. நிறை குறைகளைச் சொல்ல நினைப்பவர்களை ஊக்கப்படுத்தாமல் விட்டதால் மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்பட்டது. அப்படியே எங்காவது ஓரிருவர் எதிர்த்துக் கிளம்பினாலும் அவர்களை எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் அடக்கி ஆண்டார்கள். உண்மையைச் சொல்பவர்கள் மீது ‘உள்ளடி வேலை’ முத்திரை குத்தப்பட்டது.
மீண்டும் மீண்டும் தாங்களே அமைச்சராக வேண்டும் என நினைத்தவர்கள், தங்கள் மாவட்டத்தில் யாரும் அந்த இடத்துக்கு உயர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.எதிர்க் கட்சியுடன் ‘ஒப்பந்தம்’ பேசி தங்கள் தொகுதியில் ‘சொத்தையான’ வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டார்கள்; சொந்தக் கட்சிக்குள் உள்ள தங்களின் போட்டியாளர்களை எதிர்முகாமில் வலுவானவர்களை நிறுத்தி சாய்க்கவும் மெனக்கிட்டார்கள். கட்சிக்காக சிறை சென்ற பாரம்பரிய திமுக குடும்பங்கள் பலவற்றை காணாமலே செய்துவிட்டார்கள்.
இதையெல்லாம் கவனிக்கத் தவறிய நீங்கள் தேர்தல் நேரத்தில், ‘உடன்பிறப்பே வா’ என்று சொல்லி நிர்வாகிகளை அழைத்துக் கருத்துக் கேட்டீர்கள். அதிலும் மாவட்டச் செயலாளர்களுக்கு சிலர் ‘துப்புக்’ கொடுத்ததால் உள்ளதைச் சொல்ல வந்தவர்களும் உங்களிடம் உண்மையைச் சொல்லாமலேயே திரும்பினார்கள். தேர்தலில் இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கும் ‘தாராளமாக’ செலவு செய்தீர்கள். ஆனால் அதை, “எங்க பணம் தானே” என்று சொல்லி பதுக்கிக் கொண்ட திமுக நிர்வாகிகளை என்ன செய்யப் போகிறீர்கள்? கூட்டணிக் கட்சியினரைக் கேட்டால் இதையெல்லாம் கதை கதையாய் சொல்வார்கள்.
தோல்விக்கான காரணத்தை தேடும் முன்பாக கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைத்துவிட்டு, “நம்மால் ஜெயித்துவிட்டு இப்படிப் போய்விட்டார்களே...” என்று வேதனையில் இருக்கும் திமுக-வினரை முதலில் அழைத்து ஆறுதல் படுத்துங்கள். ஏனென்றால், அவர்களெல்லாம் நீங்கள் சொன்னதால் கூட்டணிக்காக உழைத்துவிட்டு ‘கொளத்தூர் வேதனைக்கு’ நிகரான வலியில் உழன்று கொண்டுள்ளனர்.ஆக, வேர்ப் புழுவுக்கு வைத்தியம் பார்க்காமல் மேலோட்டமாக மகசூலுக்கு மருந்தடிப்பது நீடித்த பலனைத் தராது என்பதை புரிந்து கொண்டு அப்டேட் ஆக வேண்டும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்.