காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

 
தமிழகம்

காஞ்சி சிவன் கோயிலுக்காக பக்தர்கள் கொடுத்த 312 சவரன் நகை மாயமானது எப்படி? - அரசுக்கு இந்து முன்னணி கேள்வி

மோகன் கணபதி

சென்னை: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி உற்சவர்கள் சிலை செய்ய பக்தர்களால் கொடுக்கப்பட்ட 312 சவரன் நகை எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னணி, இது குறித்து தனி நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், ‘‘ஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம். இங்குள்ள ஆயிரம் மூர்த்திகளுடன் காஞ்சி காமாட்சியும், ஏகாம்பரநாதரும், வரதராஜ பெருமாளும், கைலாசநாதரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

2015-ம் வருடம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி போன்ற உற்சவ மூர்த்தி சிலைகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் பேரில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலை செய்யப்பட்டது.

அதற்காக பக்தர்களிடம் 312 சவரன் தங்க நகை நன்கொடையாக பெறப்பட்டது. இந்த உற்சவ மூர்த்திகள் செய்யும்போது ஒவ்வொரு சிலைகளிலும் 5% தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதி. அதாவது 8.7 கிலோ தங்கத்தை சேர்க்க வேண்டும்.

இந்நிலையில் 2017 ஆம் வருடம் அண்ணாமலை என்பவர் உற்சவர் சிலைகள் மீது தங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு ஐஐடி குழுவினரால் மேற்கண்ட சிலைகளை ஆய்வு செய்ததில் ஒரு கிராம் தங்கம் கூட சேர்க்கப்படவில்லை என்ற செய்தி பக்தர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் செய்ய பக்தர்கள் மூலமாக பெறப்பட்ட தங்கத்தில், நாலரை கிலோ கொள்ளையடிக்கப்பட்டது, ஐயப்ப பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்புக்கு உள்ளாகியது.

இதற்கு முன்னோடியாக தமிழகத்திலும், ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் செய்வதில் தங்கம் மோசடி நடைபெற்று இருப்பது தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளித்துள்ளது. இது, இந்து சமய அறநிலையத்துறை மீது நம்பிக்கையின்மை உருவாக்கியுள்ளது.

சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி உற்சவர்கள் செய்ய பக்தர்களால் கொடுக்கப்பட்ட 312  சவரன் நகை எப்படி மாயமானது? எங்கே போனது? என்பதையும் தமிழகத்தில் இது போல வேறு எந்தெந்த கோயில்களில் பக்தர்களால் கொடுக்கப்பட்ட நகைகள் மாயமாகியுள்ளன என்பதையும் கண்டறிய தனி நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT