ஒசூர்: ஒசூர் சிப்காட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தொழிற்சாலை கட்டிடத்துக்கு கான்கிரீட் அமைக்கும் பணியின்போது, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஒசூர் முதல் சிப்காட் பகுதியில் புதிய தொழிற்சாலை ஒன்று அமைப்பதற்காக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், இடிபாடுகளை அகற்றி மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் (27), சீனு (24) மற்றும் குமரேசன் (25) என்பதும், இவர்கள் ஒசூரில் தங்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.