வெளிநாட்டு பல்கலை.களில் பயில ரூ.36 லட்சம் உதவித் தொகை: அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு

வெளிநாட்டு பல்கலை.களில் பயில ரூ.36 லட்சம் உதவித் தொகை: அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பு பயில, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டபபடிப்பு பயில நிதியுதவி வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) உதவித்தொகை பெற தகுதியுடைய அரசு பள்ளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அல்லது 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து, அதைத்தொடர்ந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பொறியியல், கலை, அறிவியல் மானுடவியல் துறைகளில் முழு நேர முதுநிலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை ஆணை பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான தரநிலை பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 30 பொறியியல் பிரிவில் 25 பேர், கலை அறிவியல் பிரிவில் 25 பேர் என மொத்தம் 50 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்து, அதை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலை.களில் பயில ரூ.36 லட்சம் உதவித் தொகை: அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பு
“ஏனாம் மக்களுக்கு நேரடியாக நிவாரணம் சென்றடைய வேண்டும்” - வைத்திலிங்கம் எம்.பி

X