ஊட்டி: பிரசித்திபெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மலர் கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடைவிழாவின்போது, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா காட்சி, மலர் கண்காட்சி, பழக்காட்சி ஆகியவை நடைபெறும். இந்தாண்டு 128-வது மலர் கண்காட்சிக்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 275 வகையான மலர் விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டன. இதன்மூலம் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, மலர் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
மலர் கண்காட்சிக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் மலர் கண்காட்சியை முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் கோடை விழா குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், ஊட்டியில் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்காட்சி மட்டும் நடத்த தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சி என்பதால், ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் விஜய்யை அழைக்க தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இது வரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
முதல்வர் ஊட்டி மலர் கண்காட்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், அவசரகதியில் ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால், அதற்கான ஆயத்தப் பணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தற்போதே தொடங்கப்பட்டுள்ளன. மேடை, அரங்குகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தாண்டு சிறப்பம்சமாக மகாபலிபுரம் கடற்கரை கோயில், இருவாச்சி பறவை, படகு உள்ளிட்ட அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.