சென்னை: குதிரை பேரத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் அர்லேகரிடம் அதிமுக சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “குதிரை பேரம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை தலைவரிடத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் மீண்டும் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் நாங்கள் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். குதிரை பேரத்தின் மூலம் 6 அதிமுக எம்எல்ஏக்களை குதிரை வேகத்திலே இந்த அரசு விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதை கண்டித்தும், இந்த நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தியும் ஆளுநரிடத்தில் மனு அளித்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி இன்பதுரை, “சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். அப்போது, குதிரை பேரத்தை நடத்த அனுமதிக்க மாட்டேன் என ஆளுநர் சொன்னார். அவ்வாறு சொன்ன ஆளுநர் இப்போது என்ன செய்கிறார்?
நம்பிக்கை தீர்மானத்துக்கு முன்பாக முதல்வர், அதிமுக உறுப்பினர்களிடம் சென்று சில வாக்குறுதிகளை கொடுத்தார் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்திருந்தோம். அந்த மனு நிலுவையில் உள்ளபோதே, 4 பேர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
அதன்பின்னர் இருவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டோம் என சொன்ன ஆளுநர் இப்போது என்ன செய்கிறார்?
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் குதிரை பேரத்தை அனுமதிக்க கூடாது என சொல்லியுள்ளார். எனவே, தமிழகத்தில் குதிரை பேரத்தை அனுமதிக்கக் கூடாது என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
அதுபோல ரகசிய காப்பு பிரமாணத்தை மீறும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் தனி நபர்கள் இருவர் கலந்துகொண்டது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.