தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் திமுக முறையீடு

தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் திமுக முறையீடு
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியது: “தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம்.

ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களைவிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அரசின் எல்லாக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறார்கள். இப்படி ஒரு கேவலமான சூழ்நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தோம். அவர் அதை கூர்மையாக கவனித்தார்.

ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்கிறார். 'அப்படியென்றால் அவர்களை அமைச்சராக்கி, அமைச்சரவையில் பங்கேற்க வைக்க வேண்டியதுதானே?' என ஆளுநரே சிரித்துக் கொண்டே சொன்னார். இது தவறு என ஆளுநரே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்.

கடந்த கால ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு எல்லாம் யாரையும் கைது செய்தது கிடையாது. அதையும் மீறி அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கிறார்கள். அவர் 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2 முறை அமைச்சராக இருந்தவர். அவரை 5 மணி நேரம் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், தவெகவில் இணைய வற்புறுத்தியுள்ளனர்.

தவெகவில் இணைந்தால், நீங்கள் கேட்கும் அமைச்சரவையை தருவதாக திமுகவின் அமைப்பு துணை செயலாளரான ஆஸ்டினிடம் தவெகவினர் கூறியுள்ளனர். ராஜினாமா செய்துவிடுங்கள்; விஜய் உங்களை பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வார் என வற்புறுத்தியுள்ளனர்.

வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ சீனிவாசனுக்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பேரம் பேசினர். ‘நீங்கள் இளைஞர். தவெகவுக்கு வாருங்கள். திமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடலாம்’ என தெரிவித்துள்ளனர்.

விஜயபாஸ்கர் தற்போதுதான் தவெகவில் சேர்ந்தார். அவர் ஓ.எஸ்.மணியனிடம் இங்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாக சொல்லியுள்ளார். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது. ஆக்கபூர்வமான பணிகளை செய்யவில்லை. இது குறித்து ஆளுநரிடம் சொல்லியுள்ளோம். அவர் தக்க நடவடிக்கை எடுப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளர்.

தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் திமுக முறையீடு
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் ஐக்கியம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in