மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடந்த நடைபயணம்.
ஓசூர்: தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடைபயணம் நடைபெற்றது. இதற்கு தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பையும், 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் மேகேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தோ அல்லது கூட்டாகவோ போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசியல் சூழல் உருவானால் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடும். அத்தகைய சூழல் ஏற்பட்டால் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம்.
குதிரை பேரம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இருந்து படிப்படியாக தமிழகத்துக்கும் பரவியுள்ளது. இது நல்லதல்ல. எம்எல்ஏக்கள் கட்சி மாறினால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் நாங்கள் எதிர்ப்போம். தமிழக அமைச்சரவையில் இடம்பெறும்சூழல் உருவாகி வருகிறது. ஓசூர் மண்ணிலிருந்தும் அமைச்சர் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.