இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்
பழநி: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு. நவ. 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு வெற்றி பெற வேண்டி, பழநி திருஆவினன்குடி முருகன் கோயிலில் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று பஞ்ச தீபம் ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ராம ரவிக்குமார் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் வெற்றி பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். வழக்கில் வெற்றி பெற்று, திருப்பரங்குன்றம் மலைமீது வெற்றி தீபம் ஏற்றப்படும். கடந்த அரசு அகல் விளக்கு ஏற்றாததால் அகல் விளக்கு பதிப்பகம் புத்தகப் பிரச்சினையில் அவமானப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழநியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான செலவுக் கணக்கு குறித்து இதுவரை மக்களிடம் சொல்லவில்லை. தமிழக அரசு எவ்வளவு உதவி செய்தது? கோயில் நிர்வாகம் எவ்வளவு செலவு செய்தது? ஆதீனங்கள், கொடையாளர்களிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது என்பது குறித்து கணக்கு சொல்லவில்லை. ஆட்சி மாறிய பிறகும் இன்னும் நன்கொடை வசூலித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். கோவை பெரியார் நூலக புத்தக கொள்முதலில் நடந்த முறைகேடுபோல், முருகன் மாநாட்டிலும் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் உள்ளது. முருகன் மாநாடுக்கு செய்யப்பட்ட செலவுகள், பெறப்பட்ட நன்கொடை விவரங்களை அரசு வெளியிட வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், மாநாட்டுக்கான கணக்கு வழக்குகளை சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.