தமிழகம்

அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

துரை விஜயராஜ்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பை இந்து முன்னணி அமைப்பு வரவேற்றுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அரசுத் துறைகளில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறையில் நிலவும் முறைகேடுகள் குறித்துப் புகார்கள் எழுந்த நிலையில், துறையின் அமைச்சர் ரமேஷ், உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, முறைகேடுகளில் தொடர்புடைய பல கோயில் பணியாளர்கள் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் நிதிநிலை மற்றும் மின்சாரத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து ஏற்கெனவே வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே வரிசையில், மற்ற துறைகளிலும் நிலவும் குளறுபடிகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்று, இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விரைவில் 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இந்து முன்னணி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், “கோயில் முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடக் கூடாது.

கடந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் குறித்த முழு விவரங்கள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை கிலோ கோயில் தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டன? அதில் நடந்த முறைகேடுகள் என்ன?

கோயில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நிதி முறைகேடுகள், கோயில் உண்டியல் எண்ணும் பணிகளில் நடைபெற்ற மோசடிகள், சிறப்புத் தரிசனம் மற்றும் அபிஷேக டிக்கெட் விற்பனையில் நடந்த ஊழல்கள் என இந்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT