போராட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியத்தை அப்புறப்படுத்திய போலீஸார்.
திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே கோயிலை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த தள்ளுமுள்ளுவால் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் லேசான காயமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபட்டி அறிவொளி நகர் பகுதியில் குமரன்குன்று என்ற பெயரில் முருகன், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சந்நிதிகள் கொண்ட செல்வ முத்துக்குமார சுவாமி கோயில் 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வருவாய்த் துறையில் கோயிலை இடித்து அகற்றினர். இதையறிந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காடேஸ்வரா சுப்பிரமணியம் சேர்க்கப்பட்டார். அங்கு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து தாராபுரம் சாலை, அவிநாசி சாலை, காந்தி நகர், புஷ்பா திரையரங்கு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் என 5 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ச.ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் தூண்டுதலால், அதிகாரிகள் கோயிலை இடித்துள்ளனர்.
அங்கு சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் கூடாது என்ற சட்டத்தை மீறி, கோயிலை இடிக்க உத்தரவிடுவதே தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துமீறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.