சிம்லா: இமாச்சல் தலைநகர் சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு கடந்த 22-ம் தேதி அர்ஜுன் சிங் என்ற நோயாளிக்கும் மருத்துவர் ராகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவரும் பரஸ்பரம் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து இமாச்சல பிரதேச அரசு விசாரித்து மருத்துவர் ராகவை பணி நீக்கம் செய்தது.
இந்த சூழலில் பணி பாதுகாப்பு கோரி இமாச்சல பிரதேசம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் இமாச்சல பிரதேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.