சென்னை: ”வணிக பயன்பாட்டுக்கான கேஸ் விலை உயர்வு மக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது. வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக, ஐக்கியநாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு எதிராக அமெரிக்கா, தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணையில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. 1768 ரூபாய் 50 காசுக்கு விற்று வந்த வணிக சிலிண்டர், 2 ஆயிரத்து 246 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டது. இதனால் பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. தேநீர், காபி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் காரணமாக கடந்த மாதம் ரூ.192 விலை குறைக்கப்பட்டது. ஜூலை மாதம் ரூ.153 விலை குறைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது மீண்டும் ஒரு சிலிண்டருக்கு 9 ரூபாய் 50 பைசா விலை உயர்தப்பட்டுள்ளது. இதுமக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதன் விலையை குறைக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.