மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மார்ச் 18-ம் தேதி தகுந்த பதில் அளிக்காவிட்டால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான மாவட்ட ஆட்சியர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்பதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தொடர் விசாரணையில் நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 பேரை பூஜை செய்யஅனுமதிப்பது குறித்து அறிக்கைதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்துபல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அவமதிப்பு மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இந்த அவமதிப்பு வழக்கில் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் சத்யப்ரியா, என்.மணிசெல்வன், டி.எம்.பொம்மதேவன், வி.சண்முகசுந்தரம் மற்றும் டி.ராமையா ஆகியோரை சேர்க்கவும், மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிமன்றம் நினைத்தது.
அவர்களின் வழக்கறிஞர்கள், தீபத்தூண் அருகே 5 பேரை பூஜை செய்ய அனுமதிப்பது என மார்ச் 2-ல் நீதிமன்றம் தெரிவித்த பரிந்துரையை பரிசீலித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும் என்றனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று விசாரணையை இன்னும் 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறேன். அன்று அறங்காவலர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரம் காவல்துறை அதிகாரிகள் அடுத்த விசாரணை தேதியில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு மார்ச் 18-ல் விசாரணைக்கு எடுக்கப்படும். அன்று காவல்துறை அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காகாவிட்டால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
தினமும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகளை எச்சரிக்கிறேன். ஒத்திவைப்பு கலாச்சாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். உயரதிகாரிகள் பொறுப்பற்ற கருத்துக்களைத் தெரிவித்தால், அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள். சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றுதான், உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.