சென்னை: மதுபோதையில் காரை ஓட்டியதால் சிறுவன் பலியான சம்பவத்தில் தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ள உயர் நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே கடந்த 2013 மே 22-ம் தேதி மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றதில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டியதாக தனியார் மதுபான ஆலையின் நிர்வாகியான தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அதையடுத்து ஷாஜி புருஷோத்தமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தண்டனையை நிறுத்திவைக்க கோரியும், தனக்கு ஜாமீன் கோரியும் ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், சிறையில் உள்ள அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், செப்டம்பர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி, பி்ன்னர் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், இதற்காக விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.