மதுரை: போப்பை தேர்வு செய்வதுபோல் ஜீயரை தேர்வு செய்ய வேண்டும் என ஸ்ரீரங்கம் கோயில் ஸ்தலத்தார்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடத்தின் 50-வது ஸ்ரீரங்க நாராயண ஜீயர், கடந்த 2018-ம் ஆண்டில் தனது 89-வது வயதில் உலகை விட்டுச் சென்றார். அன்றிலிருந்து ஜீயர் பதவி காலியாக உள்ளது.
ஜீயர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை 2021-ல் அறிவிப்பு வெளியிட்டது. தகுதியான பலர் விண்ணப்பித்தும் ஜீயர் நியமனம் நடைபெறவில்லை. கோயிலில் 8 ஆண்டுகளாக ஜீயர் இல்லாத நிலை உள்ளது. உடனடியாக ஜீயரை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், 6 மாதங்களில் ஜீயர் நியமனம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடத்தின் 50-வது ஜீயர், 1989-ம் ஆண்டில் பதவியேற்றார். அவர் 2018-ல் காலமானார். அவர் அடுத்த வாரிசை நியமிக்கவில்லை. மடத்தின் வழக்கப்படி அடுத்த ஜீயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கோயிலின் 'ஸ்தலத்தார்'களுக்கு உண்டு. இந்த தேர்வு ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலோ நடைபெறும்.
ஜீயர் இல்லாத சூழலில், அவருக்குரிய அதிகாரங்கள் ஸ்தலத்தார்களுக்கும் பட்டர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஜீயருக்கு வழங்கப்படும் மரியாதைகளை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். ஜீயர் இல்லாததால் அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. இந்தச் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் அடுத்த ஜீயரை தேர்வு செய்ய ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
ஜீயரை நியமிக்க 'ஸ்தலத்தார்'கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உரிய வழிகாட்டுதலை வழங்கி தகுதியான வாரிசு ஒருவரை தேர்ந்தெடுக்கச் செய்திருக்க வேண்டும். கோயிலின் செயல் அலுவலராகவும், துணை ஆணையராகவும் இருந்த அதிகாரியால் 1989-ல் 50-வது ஜீயர் நியமிக்கப்பட்டார். அதே நடைமுறையைப் பின்பற்றி தற்போதும் ஜீயரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது.
மடாதிபதி அல்லது பீடாதிபதி நியமனம் என்பது முற்றிலும் மதம் சார்ந்த நிகழ்வாகும். இதை மதச்சார்பற்ற அல்லது நிர்வாக ரீதியான செயலாக கருத முடியாது. இயல்பாகவே மடாதிபதியை நியமிக்கவோ அல்லது அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவோ அரசு துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மடாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘ஸ்தலத்தார்’களுக்கே உரியது. ஸ்தலாத்தார் தேர்வு செய்யும் நபரை ஜீயராக அரசு முறையாக அங்கீகரிக்க வேண்டும். இதைத் தவிர அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
‘ஜீயர்’ என்பவர் இறைவனின் தொண்டர். கோயில் பணியாளர் அல்ல. ஜீயர் அந்தஸ்தை கோயில் பணியாளர் நிலைக்குக் குறைக்க முடியாது. அவர் அறங்காவலர்கள் அல்லது தக்கார் ஆகியோரின் ஒழுங்கு நடவடிக்கை அதிகார வரம்புக்குள் வரமாட்டார்.
ஏதேனும் ஒரு அசாதாரண சூழலில் மடாதிபதி பதவியை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் உரிய வாய்ப்புகள் உள்ளன.
போப்பை தேர்ந்தெடுக்கும்போது கார்டினல்கள் அனைவரும் சிஸ்டைன் சேப்பலில் அடைக்கப்பட்டு புகைபோக்கியிலிருந்து வெள்ளை நிறப் புகை வரும்போது மட்டுமே கதவுகள் திறக்கப்படுவதுபோல, ஸ்தலத்தார்கள் அனைவரும் மடத்தின் வளாகத்துக்குள் ஒன்றுகூடி ஜீயர் தேர்வு முடிந்த பிறகே வெளியே வரவேண்டும் என நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.
ஸ்தலத்தார்கள் இந்த கடமையை நிறைவேற்றத் தவறினால் நீதிமன்றம் தலையிட தயங்காது. இப்பணிக்காக மற்றொரு அமைப்பின் உதவியை நாடக்கூடும்.
இதற்காக சில புகழ்பெற்ற வைணவ சான்றோர்களை மனதில் வைத்துள்ளோம். 'ஸ்தலத்தார்' தங்களுக்குரிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் தவறினால், அந்தச் சான்றோர்களின் சேவை பெறப்படும். மனு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.