தமிழகம்

கோயில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

கி.மகாராஜன்

மதுரை: அறநிலையத் துறை கோயில்களில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் அரசியல் பின்புலம் இல்லாதவர்கள் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்படுவது அவசியம்.

எனவே, கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், அதனோடு இணைக்கப்பட்ட ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், அறங்காவலராக தேர்வுக்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும், அறங்காவலர் நியமன உத்தரவுகளை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும், கோயில் இணையதளத்திலும் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.முருகன் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அறங்காவலர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

எனவே, அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை இந்து சமய அறநிலைய துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT