மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணியாளர்கள் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கு போதுமான ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் பணியாளர்களுக்கான ஊதியத்தை இந்து சமய அறநிலையத்துறை உயர்த்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி நெல்லை மாவட்டம் அம்பையைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கோயில்கள் வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. கோயில்களுக்கு இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் அல்லது முதல் நிலை அதிகாரி போன்ற நிலையில் உள்ள செயல் அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசு ஊழியர்களாக கருதப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கோயில் பணியாளர்களுக்கு அந்த கோயில் வருமானத்தில் இருந்தே ஊதியம் வழங்கப்படுகிறது.
கோயில் பணியாளர்கள் அகப்பணியாளர்கள் (உள் பணியாளர்கள்) மற்றும் புறப்பணியாளர்கள் (வெளிப் பணியாளர்கள்) என 2 வகைகளாக உள்ளனர். போதிய சொத்துகள் இல்லாத அல்லது போதுமான வருமானம் ஈட்ட முடியாத கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே கிடைக்கிறது.
சில கோயில்களில், சமையல் செய்பவரின் மாத ஊதியம் வெறும் ரூ.400 மட்டுமே. அப்படியென்றால், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தோட்டப் பணியாளர்கள் போன்ற பிற ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு குறைவாக இருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இது தொடர்பான வழக்கை 2021-ல் நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் ஊதியம் மற்றும் பிற பணி சார்ந்த மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும், அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அந்த உத்தரவுக்கு தடையும் பெறப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும்போது அதை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். அப்படியிருக்கும்போது அதே கோரிக்கை தொடர்பாக புதிதாக வழக்கு தொடரலாம். ஆயிரக்கணக்கான கோயில் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த, சொற்ப ஊதியம் வழங்கப்படுவது எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது.
ஒவ்வொரு கோயிலுக்கும் வருவாயை அதிகரிக்க குழுக்களை உருவாக்கலாம். பல புகழ்பெற்ற தொழில்முனைவோர் உள்ளனர். உதாரணமாக, ஸோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவை சொல்லலாம். நீதிமன்ற ஊழியரின் மகனான அவரது வெற்றிப் பயணம் ஒரு ஊக்கமளிக்கும் கதையாகும். இத்தகைய நபர்களை உள்ளடக்கி, கோயில்களுக்குத் தகுந்த வருவாய் மாதிரிகளை உருவாக்கலாம்.
இந்த உன்னதமான நோக்கத்துக்கு ஆதரவைத் திரட்ட சமூக ஊடகங்களை சிறப்பாகப் பயன்படுத்தலாம். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கலாம். கோயில் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தின் கட்டாய உத்தரவு இருக்கும் நிலையில், அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
அறநிலையத் துறை வரம்புக்குள் வரும் பொதுக் கோயில்களில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 2 மாதங்களில் அறநிலையத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.