சென்னை: தவெக அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ள கரூர் ரமேஷ், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ‘வழக்கை திருவல்லிக்கேணி போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
போலீஸார் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று அவர் கோரியுள்ளார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது.
அப்போது நடைபெற்ற வாதம்: மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச் சாரி: கரூரில் உடற்பயிற்சி நிலையம் நடத்தும் மனுதாரரை போலீஸார் சம்பந்தமின்றி இந்த வழக்கில் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.1.03 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கில் பலதகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மாநில போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்: ஊத்தங்கரை எம்எல்ஏ மட்டு மின்றி மொத்தம் 10 தவெக எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் குதிரை பேரம் நடந்துள்ளது.
இந்த கூட்டுச் சதியில் மனுதாரருக்கு முக்கிய தொடர்பு இருப்பதால்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை கைதானவர்களிடம் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டு முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள் ளன. பொய் வழக்கு ஜோடிக்கும் அவசியம் இல்லை.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்: ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியது சாதாரண குற்றமல்ல. செந்தில் பாலாஜி, அவரது தம்பிக்கு இதில் தொடர்பு உள்ளது. வழக்கின் பின்புலம் குறித்து ஆராய வேண்டியுள்ளது. மாநில போலீஸார் சரியான கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப் பிக்கக் கூடாது. இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிபிஐ தரப்பில் 4 வார காலத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். மனுதாரர் ரமேஷுக்கு எதிரான விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித் துள்ளனர்.