

சென்னை: மதுபான சில்லறை விற்பனையை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளும், 2 ஆயிரம் பார்களும் செயல்படுகின்றன.
டாஸ்மாக் மூலம் தினமும் சராசரியாக ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைகிறது. வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
தமிழகத்தில் மது விற்பனை தனியார் வசம் இருந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.
அண்மையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், மதுபான விற்பனையில் தனியார்மயம் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த சட்டத்திருத்தம் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் டாஸ்மாக் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக நகர்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, படிப்படியாக முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனியார்மயத்துக்கு எதிர்ப்பு
இதற்கிடையே, மது விற்பனை தனியார்மயமாவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்காக இருக்க வேண்டும்.
தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் மது வெள்ளமாகப் பாயும். எனவே, மதுக்கடைகளை தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிட்டு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைத்தால் சட்டவிரோத மதுபானங்களின் விற்பனை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறைக்காது.
டாஸ்மாக் கடைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.