மதுரை: தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிக்காக மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள், அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமைக் கருவேல மரங்களை அகற்றவும் இப்பணியை மேற்பார்வையிடவும் மதுரை அமர்வுக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்தும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கு நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்கரவர்த்தி முன்பு பட்டியலிடப்பட்டிருந்தது. அரசுத் தரப்பில், தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனால் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தொடங்க இயலவில்லை. தேர்தல் முடிந்தவுடன் பணி விரைவாக தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்பார்வையிடுவதற்காக வருவாய் மண்டல அலுவலர் தகுதிக்கு குறையாத ஒருவரை மேற்பார்வை அலுவலராக மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்க வேண்டும்.
மேற்பார்வை அலுவலரின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகளிடம் வழங்க வேண்டும்.
தற்போது வறட்சி நிலவுகிறது.
இப்போது விவசாயிகள் சற்று ஓய்ந்திருப்பர். நீர்நிலைகளிலும் தண்ணீர் குறைவாக இருக்கும். இதனால் சீமைக் கருவேல மரங்களையும் சுலபமாக அகற்ற முடியும்.
எனவே தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான பணிகளை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும். அடுத்தகட்ட விசாரணை ஜூன் 5-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.