பாமக ஏம்எல்ஏ அருள்

 
தமிழகம்

பாமக ஏம்எல்ஏ அருள் மீதான கொலை முயற்சி வழக்கு: காவல்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பாமக ஏம்எல்ஏ அருள் மீதான கொலை முயற்சி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் இருவர் இடையே கட்சி தலைமை பதவி தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரும் தாங்கள் தான் பாமக தலைவர் என உரிமை கோரி வருகின்றனர்.

இதனால் இருவரின் ஆதரவாளர் இடையே கடுமையான கருத்து மோதல் இருந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவ. 4-ம் தேதி சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அருள் தரப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மொத்தம் 5 வழக்கு பதிவு செய்யப்படது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தரப்பில் அளித்த புகாரில் மருத்துவர் அன்புமணி தரப்பினர் மீது இரண்டு வழக்கும், அன்புமணி தரப்பினர் அளித்த புகாரில் எம்ஏல்ஏ அருள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது மொத்தம் 3 வழக்கும் காவல்துறை பதிவு செய்தது.

இந்நிலையில் அருளுக்கு எதிராக புகார் அளித்த செந்தில்குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாம் அளித்த புகார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் காவல்துறை சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் காவல்துறை எந்த மேல் நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அருளுக்கு எதிராக மட்டும் இரண்டு புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் அருள் தரப்பினர் அளித்த புகார் மீது தங்களின் தரப்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருள் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர். எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதி காவல்துறை தரப்பில் இந்த புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற நேரிடும் என எச்சரித்தார். பின்னர் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 20-க்கு தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT