சென்னை: தமிழ் மண் உயிரினங்களையும், இயற்கையையும் நேசிக்கக் கூடியது என்று கோவையில் நடைபெற்ற கி.ரா. விருது வழங்கும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தெரிவித்தார்.
சக்தி மசாலா நிறுவனம், விஜயா பதிப்பகம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறந்த எழுத்தாளர்களுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் கடந்த 27-ம் தேதி கி.ரா. விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், புனிதவதி சிதம்பரம் வரவேற்றார். சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் பி.சி.துரைசாமி தலைமை உரையாற்றினார். நடிகர் சிவகுமார் பேசும்போது, “இந்தியாவில் எழுத்தாளருக்கு ரூ.5 லட்சம் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது அரிதானதாகும்.
சக்தி மசாலா நிறுவனத்தின் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோரின் பங்களிப்புடன் இது சாத்தியமாகியுள்ளது” என்றார். தொடர்ந்து, எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன் எழுத்தாளரும், விருதாளருமான எம்.கோபாலகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தார்.
சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் சாந்தி துரைசாமி, எழுத்தாளர் சு.வேணுகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு கி.ரா. விருது மற்றும் சான்றிதழ், ரூ.5 லட்சத்துக்கான காசோலையை உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் வழங்கி பேசும்போது, “ஒரு படைப்பு என்பது சக மனிதர்களை நேசிக்கவும், மனிதர்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு போதிக்கிறது.
தமிழ் மண் உயிரினங்களை, மரங்களை, இயற்கையை நேசிக்கக் கூடியது. நாவல், கட்டுரை, சிறுகதைகள், மொழிபெயர்ப்புகளில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தடம் பதித்துள்ளார்” என்றார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பக நிர்வாகி சிதம்பரம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர். பேச்சாளர் இல.சிவசக்தி வடிவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.