

சென்னை: தமிழக அரசு வெற்றி பயணத்திட்டத்தில் தனியார் பேருந்துகளை இணைத்து அதற்கு மானியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் அக்கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 69 சதவீத பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ‘வெற்றிப் பயணம்’ எனப் பெயரிடப்பட்டு, வரும் அக்டோபர் 2ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். வெற்றி பயணம் திட்டத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படுவதால், தனியார் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்.
இதனால் தனியார் பேருந்து துறையைச் சார்ந்துள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படுவதைப் போல, தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
அதற்கான கட்டணத்தை அரசு மானியமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், செப்.29ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் செப்.30ம் தேதி (நாளை) நள்ளிரவு 12 மணி வரை தனியார் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு கூறினார்.