மதுரை: ஊழல் வழக்கில் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தொண்டியை சேர்ந்த கலந்தர் ஆசிக், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி தமிழக அரசு வழங்கும் நல திட்டப் பணிகளுக்கான நிதி முறையாக செலவிடாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற திட்டப் பணிகள் அரசின் பொது நிதி மற்றும் திட்ட பணிகளில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இது குறித்து உரிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பேரூராட்சி இணை இயக்குநரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன்.
அந்த வழக்கு விசாரணைக்குபோது பேரூராட்சிகளுக்கான இணை இயக்குநர் சம்பவம் குறித்து விசாரணை செய்து தொண்டி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்த மகாலிங்கம், செல்வராஜ், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 6 செயல் அலுவலர்களுக்கு குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளருக்கும் அறிக்கை அனுப்ப பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்த உயர் நீதிமன்றம் பேரூராட்சி இயக்குநர் குறிப்பிட்டுள்ள ஆறு செயல் அலுவலர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் எவ்வித விசாரணையும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத் துறையின் தென் மண்டல காவல் துறை கண்காணிப்பாளர், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு உள்ளார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது நீதிபதி, ‘நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவில்லை. இதுபோன்ற வழக்குகளில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் மீது வழக்கு போட்டாலே பேரூராட்சி முறைகேடுகள் தடுக்கப்படும். ஆனால், இதுவரை விசாரணையே செய்யவில்லை.
லஞ்ச ஒழிப்புத் துறை, அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட துறையிலும் அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறி விசாரணையை தாமதம் செய்கிறீர்கள். இதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்; நீங்கள் யாரை ஏமாற்ற இந்த வேலை செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை.
லஞ்சத்தை ஒழிப்பதற்கு அரசு வாட்ஸ் அப் நம்பர் அறிமுகப்படுத்தி உள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் வாட்ஸ் அப்பில் புகார் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்து என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்? மக்களை ஏமாற்ற வேண்டாம். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.