சென்னை: புரட்சி அண்ணா திமுகவின் முதன்மைச் செயலாளரான பெங்களூரு வா.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை கரோனா காலகட்டத்தில் போயிருப்பார் என்றும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலினை பால்டாயில் குடித்தவர் என்றும் அவதூறாகவும், அநாகரீகமாகவும் பேசி வருகிறார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பழனிசாமி அவதூறாகப் பேசி வருவதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அத்துடன் அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘முதல்வர் ஸ்டாலின் குறித்து பழனிசாமியின் அவதூறு பேச்சால் பெங்களூரு புகழேந்திக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது?’’ என கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.