மதுரை: தமிழக காவல் துறையில் காவலர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், காவல் துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்த பிறகு முதல் நிலை காவலர்களாகவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைக் காவலர்களாகவும், அடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.
இவர்களில் முதல் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு மதுரை, திருச்சி, நெல்லையில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்படும்போது, அங்குள்ள காலிப் பணியிடங்களின் அடிப்படையில் அவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.
சரக அளவில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் பணியில் இளையவர்களின் கீழ் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் காவல்துறையில் காலி பணியிடங்கள் குறைவாக இருப்பதால் விரைவில் பதவி உயர்வு கிடைப்பதில்லை.
இந்நிலையில், 170 காவலர்கள் விரைவில் பதவி உயர்வு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என். செந்தில் குமார் அமர்வு விசாரித்தது.
தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலர்களாக தேர்வாகும் நாளிலிருந்து கணக்கீடு செய்து சிறப்பு சார்பு ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், ஆய்வாளர் பதவி உயர்வுக்கு மாநில அளவிலான பணி மூப்பு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: காவலர்களுக்கு மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசின் முடிவின்படி ஆயுதப்படையில் 1993 பேட்ஜில் தேர்வாகி இதுவரை பணியில் உள்ளவர்களுக்கு மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மாநில அளவிலான சீனியாரிட்டி 2026 ஜன. 1-ம் தேதி பணியில் இருப்பவர்களிடம் இருந்து அமல்படுத்த வேண்டும். 2025 டிச. 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.
அவர்கள் இந்த உத்தரவின் அடிப்படையில் பணப் பலன்களையோ, நிலுவை பலன்களையோ கோர முடியாது. ஏற்கெனவே சரக அடிப்படையிலான தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்றவர்களையும், அவர்கள் பெறும் பலன்களிலும் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு குறித்து அரசு உடனடியாக அரசாணை பிறப்பிக்க வேண்டும். மாநில பணி மூப்பு பட்டியல் தயார் செய்து 2 மாதங்களில் வெளியிட வேண்டும். 2026 ஜன.1-ம் தேதி ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.