மதுரை: பொதுக் கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் இடிப்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை ராதாபுரத்தைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாகர்கோவில் நகராட்சி சந்தையில் கடை நடத்தி வருகிறேன். இந்த சந்தை 2015-ல் கட்டப்பட்டு, 2017-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
பொதுவாக, அரசால் கட்டப்படும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்கள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்படும். ஆனால் சந்தை கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிவதற்குள் தற்போதைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், மார்க்கெட் வளாகத்தில் இருந்த மொத்தம் 260 கடைகளில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ஏற்கெனவே 150 கடைகள் இடிக்கப்பட்டு விட்டன. அவ்வாறு காலி செய்யப்பட்ட இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு மாற்று இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை உருவாக்கும்போது, தற்போதைய தேவைகளை மட்டும் பார்க்காமல், எதிர்கால விரிவாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆரம்ப கட்டத்திலேயே போதுமான இடவசதியுடன் திட்டமிடாமல் கட்டிடங்களை கட்டிவிட்டு, பின்னர் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் அவற்றை இடித்துத் தள்ளுவது பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போதே தொலைநோக்குப் பார்வையுடன் போதுமான நிலத்தை தேர்வு செய்து கையகப்படுத்த வேண்டும். இத்தகைய முறையான அணுகுமுறை மட்டுமே முன்கூட்டியே கட்டடங்கள் இடிக்கப்படுவதைத் தடுப்பதோடு, மக்கள் வரிப்பணத்தின் நிலையான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்யும். இந்த வழக்கில் வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிது என உத்தரவிட்டனர்.