தமிழகம்

9 மீனவர்கள் உயிரிழப்பு: நியாயமான இழப்பீடு வழங்க படகு உரிமையாளருக்கு ஐகோர்ட் அறிவுரை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முரசு புயலில் சிக்கி 9 மீனவர்கள் பலியான விவகாரத்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டுமென படகு உரிமையாளருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேர் முரசு புயல் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேரும் கடலில் மூழ்கி இறந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராயபுரம் போலீஸார், படகு உரிமையாளரான டி.செல்வழகனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செல்வழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பலியான 9 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் படகு உரிமையாளரான செல்வழகன் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.

அப்போது செல்வழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.விஜேந்திரன், புயலில் சிக்கி பலியான 9 மீனவர்களின் குடும்பத்துக்கும் இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 50 ஆயிரம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது என்றும், 3 மீனவர்களின் குடும்பத்தினர் தனக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், தவிர தமிழக அரசு தரப்பிலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி கூறுகையில், ‘அரசும், பிற அமைப்புகளும் வழங்கும் தொகையை கருணைத்தொகையாகவே கருத முடியும். இறந்த இளம் வயது மீனவர் ஒருவருக்கு 7 மாத குழந்தை உள்ளது.

அவரது மனைவிக்கும் ரூ. 2 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்றால் அந்தத்தொகையை வைத்து அவரால் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும்.

அரசு இழப்பீடு வழங்கியிருந்தாலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல் பொறுப்பு படகு உரிமையாளரையே சாரும். எனவே இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு படகு உரிமையாளரும் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்.

எனவே படகு உரிமையாளர் மற்றும் 9 மீனவர்களின் குடும்பத்தாரை நாளை (நவ.17) மாலை நேரில் அழைத்துப்பேச வேண்டுமென ராயபுரம் போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு (நவ.18) தள்ளி வைத்துள்ளார். மேலும் செல்வழகனை நவ.19 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கக்கூடாது எனவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT