புத்தக கொள்முதல் முறைகேடு விசாரணை நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விவரிப்பு

புத்தக கொள்முதல் முறைகேடு விசாரணை நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விவரிப்பு
Updated on: 
2 min read

மதுரை: “கடந்த 3 ஆண்டுகளில் 2 பதிப்பகங்களுக்கும் சேர்த்து ரூ.1 கோடியே 74 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு பதிப்பகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்” என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றவும், கொள்முதல் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கடந்த 2024-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாத நூலகத் துறை முதன்மைச் செயலர், இயக்குநர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, புத்தக கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதியவும், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டது, அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நூலகத்துறை அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொது நூலகத் துறை இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியிடப்படும்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “புத்தக கொள்முதலில் முறைகேடு நடக்காமல் தடுக்கவும், முறைப்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது முக்கியமானது” என்றனர்.

அதற்கு அரசு தரப்பில், “இந்த முறைகேடு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏஐ மூலம் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல்களை கருத்தில்கொள்ள அரசு தயாராக உள்ளது.

ரூ.30 கோடி மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2 பதிப்பகங்களுக்கும் சேர்த்து ரூ.1 கோடியே 74 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு பதிப்பகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். சிக்மா பதிப்பகம் தொடர்பாக இன்னும் விசாரணை தொடங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘முறைகேடு விசாரணையின்போது நூலகத் துறை முன்னாள் இயக்குநர் அளித்த விவரங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். வழக்கில் கூடுதல் விவரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை நவ. 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

‘ஆடம்பரமாக வாழும் மதுரை எம்.பி.’

நூல் கொள்முதல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியது: “நான் கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசிய விஷயத்தை வைத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், நான் எப்படி என்னுடைய பணிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்துவதுபோல் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்துக்கு சென்றபோது, உயர் ரக காரில், ஆடம்பர உடையில் வந்து ஒருவர் இறங்கினார். நான் யாரோ என நினைத்து அவரை பார்த்தபோது, அவர் எம்பி வெங்கடேசன் என தெரியவந்தது. அவர் முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு செல்ல, நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார். ஒரு கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிபோல உயர் ரக காரில் வந்திறங்கினார். புத்தக ராயல்டி தொகையை மட்டும் வைத்து இந்த மாதிரி வாழ முடியுமா என்பது எனக்கு தெரியாது” என்று நீதிபதி கூறினார்.

முன்னதாக சு.வெங்கடேசன் எம்.பி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ‘பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்’ என்று நீதியரசர் ஜி. ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. அதை விட்டுவிட்டு நடந்திருப்பது பாவம், அதிலிருந்து விடுபட புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பது ஜோதிடர்களின் பணி. சட்டத்தின் ஞானத்துக்காக போற்றப்படும் அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்துக்காக மதிக்கப்படும் பெரியாரும்தான் மகா பெரியவர்கள்’ என பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவில் சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசிய உரையின் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தக கொள்முதல் முறைகேடு விசாரணை நிலை என்ன? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விவரிப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு நவ.18, 19-ல் மிக கனமழை எச்சரிக்கை

X