நாகப்பட்டினம்: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வேளாங்கண்ணியில் இம்மாத இறுதியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. நாகை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. டெல்லியை சேர்ந்த ஜெயம் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளாங்கண்ணியைச் சுற்றி 25 கி.மீ வான் பரப்பளவில் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் வரை பயணிக்க முடியும். வேளாங் கண்ணி பகுதியை சுற்றிப் பார்க்க 10 நிமிடத்துக்கு ஒரு நபருக்கு சுமார் ரூ.6,000 கட்டணம் நிர்ணயிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
45 நிமிடங்களில்... உட்கட்டமைப்பு தயாரானதும், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்தும் நேரடி சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சாலை மார்க்கமாக செல்ல 3 மணி நேரத்துக்கு மேல் ஆகும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் 45 நிமிடங்களில் சென்றடையலாம்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி, வேளாங்கண்ணிக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சுற்றுலாப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பேரிடர் மேலாண்மை மற்றும் மருத்துவ அவசரக் காலங்களுக்கும் பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.