சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்.18) நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.