சென்னை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (ஆக.13, 14) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
இன்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், நாளை மேற்கண்ட 4 மாவட்டங்களுடன், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.