சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
17-ம் தேதி நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
18-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
19-ம் தேதி நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.