சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை பரவலாக இரவு வரை நீடித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அன்றே சென்னை மற்றும் புறநகரில் ஆங்காங்கே, விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. 16-ம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வடசென்னை பகுதியில் மழை தொடங்கி, பின்னர் மாநகர், புறநகர் பகுதிகளுக்கும் பரவி இரவு 8 மணிக்கு பிறகு இடி, மின்னலுடன் கூடிய கனமழை நீடித்தது. விசாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதனால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இரவு முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணித்தனர். சுரங்கப் பாலங்களில் நீர் தேங்காதவாறு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.