கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ மற்றும் 4.5 கிமீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 23-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை, இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 5 செமீ, சேலம் மாவட்டம் கருமந்துறை, நாகப்பட்டினத்தில் தலா 4 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பார் அணை, ஊத்தங்கரை, சேலம் மாவட்டம் வீரகனூர், கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.