சென்னை: தமிழகத்தில் ஜூன் 28-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 25) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், 26, 27 தேதிகளில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 28-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 29, 30 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 27-ம் தேதி கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்திலும், 28-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 29-ம் தேதி கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 4 செமீ, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் 3 செமீ, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ARG (பெரம்பலூர்) 2, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பெரம்பலூர் (பெரம்பலூர்), பெரம்பூர் (சென்னை), வேப்பந்தட்டையில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.